புதுடெல்லி: டிசம்பர் மாதம் 21ஆம் தேதி உலக தியான தினமாக கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையுடன் இந்தியாவும் தாக்கல் செய்த நகல் தீர்மானத்தை சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அந்தத் தீர்மானத்தைப் பல தரப்பினர் ஒன்றுபட்டு ஏற்றுக்கொள்வதற்கு வகைசெய்த குழுவில் இந்தியாவுடன் லிக்டென்ஸ்டைன், நேப்பாளம், இலங்கை, மெக்சிகோ, அண்டோரா உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன. 193 உறுப்பு நாடுகளையும் பகுதிகளையும் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 6) உலக தியான தினத்துக்கான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் நமக்குள் மாற்றத்தைக் கொண்டுவருவதற்குமான தினம். இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் டிசம்பர் 21ஆம் தேதியை உலக தியான தினமாக அனுசரிப்பதற்கான தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொள்வதற்கு முக்கிய குழுவின் பிற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் வழிகாட்டியதில் மகிழ்ச்சி,” என்று ஐக்கிய நாடுகள் சபைகள் மன்றத்தின் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரீஷ் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
டிசம்பர் 21ஆம் தேதி இடம்பெறும் காலம், இந்திய பாரம்பரியத்தின்படி நம்மை நாமே ஆராய்ந்துகொண்டு மாற்றங்களைச் செய்துகொள்ளவும் தியானத்துக்குமான நாள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் இரு நாள்களில் சூரியன் நிலநடுக்கோட்டிலிருந்து ஆக அதிக தொலைவில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளான டிசம்பர் 21ஆம் தேதி உலக தியான தினமாக கொண்டாடப்படவுள்ளது.
அதற்குச் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 21, வெயில் காலத்தில் சூரியன் உலகின் நடுக்கோட்டிலிருந்து ஆக அதிக தொலையில் இருக்கும் நாளாகவும் டிசம்பர் 21, குளிர்காலத்தில் அதே நிகழ்வு இடம்பெறும் நாளாகவும் பார்க்கப்படுகின்றன.
2014ஆம் ஆண்டு முதல் அனைத்துலக யோகாசன தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அது உலகளாவிய இயக்கமாக உருவெடுத்திருப்பதாக திரு ஹரீஷ் குறிப்பிட்டார்.

