இந்தியாவின் மக்கள்தொகையில் தற்போது ஒரு விசித்திரமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
‘டிரான்ஸ்ஃபார்ம் ரூரல் இந்தியா’ என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, பொருளியல் வளர்ச்சியை முழுமையாக எட்டுவதற்கு முன்பாகவே முதியவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நாடாக இந்தியா மாறி வருகிறது.
‘மக்கள்தொகை மாற்றம், மாறிவரும் குடும்பங்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவின் எதிர்காலப் பராமரிப்புச் சூழல்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கை அண்மையில் நிகழ்ந்த இந்திய கிராமப்புறக் கருத்தரங்கின்போது வெளியிடப்பட்டது.
2050ஆம் ஆண்டில் இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 34.7 கோடியாக இருக்கலாம். அதன்படி, சராசரியாக ஐவரில் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார்.
அவர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வசிப்பார்கள். அதாவது, 2050ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு பத்து முதியவர்களில் கிட்டத்தட்ட ஏழு பேர் கிராமப்புறங்களில் வசிப்பார்கள்.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாடு வேகமாக மூப்படைந்து வருவதாக ஆய்வு எச்சரிக்கிறது.
வளர்ச்சியடைந்த பல நாடுகள், இதேபோன்ற மக்கள்தொகை மாற்றங்களுக்கு உள்ளாவதற்கு முன்னர் அடைந்திருந்த வருமான நிலைகளைவிட இந்தியா இன்னும் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அதாவது, மக்கள்தொகை மூப்படையும் முன்னரே பொருளியல் ரீதியாக அந்த நாடுகள் செழிப்படைந்திருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு முதியவரை ஆதரிக்கக்கூடிய, உழைக்கும் வயதில் உள்ள இளையர்களின் எண்ணிக்கை 2001ஆம் ஆண்டு 8.4ஆக இருந்தது. இது, இவ்வாண்டு முடிவதற்குள் சராசரியாக 5.2ஆகக் குறையும் என்று ஆய்வு கணித்துள்ளது.
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு, நீண்டகால முதியோர் ஆய்வு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கணிப்புகள், நேரப் பயன்பாட்டு ஆய்வுகள் போன்ற தேசிய தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறிய குடும்பங்கள், வேலைக்காக வெளியூர் செல்லும் இளையர்கள், மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் குடும்பம் சார்ந்த முதியோர் பராமரிப்பு முறை தற்போது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
“இருப்பினும், மூத்தோருக்கான பராமரிப்பில் கிட்டத்தட்ட 94 விழுக்காடு வீட்டுக்குள்ளேயே வழங்கப்படுகிறது.
“ஆனால், அதிகரித்து வரும் சிக்கலான பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தேவையான எண்ணிக்கையில் குடும்பங்களின் உறுப்பினர்கள் இல்லை,” என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


