புதுடெல்லி: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் (USCBP) பிரிவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு பிப்ரவரியில் 1,628 இந்தியர்கள் மட்டுமே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குற்றத்துக்காக கைதாகி உள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரியில் 3,132 பேரும், 2024, டிசம்பரில் 5,600க்கும் மேற்பட்ட இந்தியர்களும் இதே குற்றத்துக்காக எல்லைப்புற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் நாடு கடத்தும் நடவடிக்கையால் மற்றொரு பலனும் கிடைத்துள்ளது.
கடத்தல்காரர்களின் செயல்பாடுகள் கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த கடத்தல்காரர்கள் பலர் தற்போது பின்வாங்கியுள்ளனர்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவுத் தரவுகளின்படி, ஆண்டுதோறும் அதிகபட்சமாக நூறாயிரம் இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி செய்வதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கல்விக்காக அமெரிக்காவுக்கு வருவதை இந்திய மாணவர்கள் அறவே கைவிட வேண்டும் என அங்கு பட்டமேற்படிப்பை முடித்துள்ள இந்திய மாணவர் ஒருவர் அறிவுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக அவர் இணையத்தளம் ஒன்றில் வெளியிட்ட கடிதம் ஒன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றன என்றும் மாணவர்களின் எதிர்காலத்துக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரியில் 74 குஜராத்திகள் உட்பட 388 இந்தியக் குடியேறிகளை அமெரிக்கா ராணுவ விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பியது. முதல் மூன்று விமானங்களில் அனுப்பப்பட்டவர்கள் கைகால்களில் விலங்குகளுடன் வந்தனர்.