‘யுனெஸ்கோ’ கலாசார மரபுடைமைப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகை

2 mins read
b789f0a9-d791-439d-b369-da64b3335398
கடந்த அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகையை வாணவேடிக்கை நிகழ்த்தி கொண்டாடிய மும்பை மக்கள். - படம்: ஏஎஃப்பி

இந்தியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி யுனெஸ்கோவின் கலாசாரப் பாரம்பரியப் பட்டியலில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை அறிந்த இந்திய சமூகம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) முதல் வியாழக்கிழமை (டிசம்பர் 11) வரை கூட்டங்களை நடத்தி வருகிறது.

யுனெஸ்கோ கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள 78 நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கலாசார மரபுகளை வருங்காலத்திலும் கட்டிக்காப்பது, அவற்றின் பன்முகத்தன்மை மீதான விழிப்புணர்வை அதிகரிப்பது என்பன போன்ற உயரிய நோக்கங்களை உள்ளடக்கியது அந்தப் பட்டியல்.

யுனெஸ்கோ கலாசாரப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளதை மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ‌ஷெகாவத் வரவேற்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி இணைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான இந்த நாள் இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில், இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியங்களுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

“நம்பிக்கை, நல்லிணக்கம், சமத்துவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தீபாவளிக் கொண்டாட்டத்தை உலகளவில் எடுத்துச் செல்ல இந்த அங்கீகாரம் உதவும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பரந்து விரிந்துள்ள இந்திய சமூகத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சீக்கிய, ஜைன சமயத்தினர் அந்தப் பண்டிகையை ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். தீமையை வீழ்த்தி வெற்றி கண்ட நாளாக அந்தப் பண்டிகை கருதப்படுகிறது. அதாவது, கொடுங்கோல் மன்னனாக வரலாறுகள் சித்திரிக்கும் ராவணனை வென்ற பின்னர் அயோத்திக்கு ராமர் திரும்பும் நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் அமாவாசை நாளையொட்டி கடைப்பிடிக்கப்படும் தீபாவளிப் பண்டிகையை விளக்குகள் ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் இந்திய மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்