புதுடெல்லி: இந்தியாவின் முதலாவது மனநலத் தூதராக நடிகை தீபிகா படுகோனை இந்திய சுகாதார, குடும்பநல அமைச்சு நியமித்துள்ளது.
அப்பொறுப்பை ஏற்பதில் தீபிகா மிகுந்த பெருமிதம் கொள்வதாகவும் மனநலம் பேணுவதில் இந்திய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க அவர் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) தெரிவித்தது.
மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் மனநலக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் பங்களிக்க தீபிகா இலக்கு கொண்டுள்ளார்.
விழிப்புணர்வு அதிகரிப்பிலும் மனநல மேம்பாட்டிலும் நாடு எடுத்துள்ள முக்கியமான அடியை இந்தப் பங்காளித்துவம் காட்டுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுபற்றி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள தீபிகா, “எனது சொந்த வாழ்க்கை மூலமாகவும் கடந்த பத்தாண்டுகளாக ‘டில்’ அறநிறுவனம் மூலமாக மேற்கொண்ட பணிகள் மூலமாகவும், நாம் ஒன்றிணைந்து செயல்படுவதால் எந்த அளவிற்கு மனநலமிக்க இந்தியாவைக் கட்டமைக்க முடியும் என்பதைக் கண்டுள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.