ஜெனிவா: மனித உரிமைகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையம் தனது 60வது அமர்வை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடத்தியது.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் தூதர் இந்தியா மனித உரிமைகளுக்கு எதிராக நடப்பதாக அடுக்கடுக்காகப் புகார்களைத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியாவின் தூதர் முகம்மது ஹுசைன் புதன்கிழமை (ஆகஸ்ட் 1) அந்தக் கூட்டத்தில் பேசினார்.
“இந்தியா மீது பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் முரணானவை. அடிப்படை ஆதாரமற்ற கருத்துகள் அவை.
“பிற நாடுகளைக் குறைசொல்வதற்கு முன்னால் தமது சொந்த சமூகத்திற்கு இழைக்கும் தீங்கை பாகிஸ்தான் கவனிக்க வேண்டும்.
“பாகிஸ்தானில் உள்ள இன, சமய சிறுபான்மையினருக்கு எதிராக அரசாங்க ஆதரவுடன் நடக்கும் பாரபட்சச் செயல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்த்தப்படுகின்றன.
“மனித உரிமைகள் மோசமடைந்துள்ளதாக பாகிஸ்தான் நிலவரத்தைக் குறிப்பிட்டு அறிக்கைகள் வந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“அப்படிப்பட்ட ஒரு நாடு மனித உரிமைகள் பற்றி பிற நாடுகளுக்குப் போதிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
“இந்தக் கருத்துமன்றத்தைப் பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறது. அது அவர்களின் பாசாங்குத்தனத்தையே வெளிப்படுத்துகிறது,” என்று இந்தியத் தூதர் பேசினார்.
கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் பாகிஸ்தானின் தலிபான் இயக்கத்தினருக்குச் சொந்தமான கட்டடத்தில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தை திரு ஹுசைன் நினைவுபடுத்தினார்.
அப்பாவிப் பொதுமக்கள் உட்பட 24 பேர் அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதையும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.