சென்னை: முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் நடைபெற்றது.
அனிதா ராதாகிருஷ்ணன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்ததோடு, நடிகை ஒருவருடன் தொடர்புபடுத்தியும் பேசியிருந்தார்.
அதையடுத்து, முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தவெக நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
அவதூறு வழக்கில் கைதாவதைத் தவிர்க்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிபதி ஜிகே இளந்திரையன் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நிராகரித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆத்தூரிலிருந்த அனிதா ராதாகிருஷ்ணனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்டாலின், கனிமொழி கண்டனம்
அந்தக் கைது நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
“வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலம் தமது நாற்காலியைத் தக்க வைத்து, விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழி!,” என ஸ்டாலின் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அனிதா ராதாகிருஷ்ணன் தமது தொகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று கனிமொழி கூறியுள்ளார்.

