எம்பிக்ககள் குறித்து அவதூறு: மோடி மீது காங்கிரஸ் புகார்

எம்பிக்ககள் குறித்து அவதூறு: மோடி மீது காங்கிரஸ் புகார்

2 mins read
321a5b14-5b7f-4a79-96b5-0612f86f241e
பிரதமர் மோடி. - கோப்புப்படம்: தி ஃபெடரல்

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

எனவே பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கட்சி எம்பிக்கள் சார்பில் மக்​களவை சபா​நாயகரிடம் உரிமை மீறல் நோட்​டீஸ் வழங்கப்பட்டது.

இதுதொடர்​பாகக் காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு கடிதம் எழு​தி உள்ளார். அதில், கடந்த ஏப்​ரல் 17ஆம் தேதி மக்​களவை​யில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா தோற்​கடிக்​கப்​பட்​டதையடுத்து, ஏப்​ரல் 18ஆம் தேதி பிரதமர் மோடி தொலைக்​காட்​சி​யில் நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​யதாகவும் அப்போது மசோ​தா​வைத் தடுத்​த​தாகக் கூறி எதிர்க்​கட்சி எம்பிக்​களைப் பிரதமர் விமர்​சித்​ததாகவும் திரு வேணுகோபால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒரு பிர​தி​நி​தி, தனது கடமை​யைச் செய்​வதைக் கேள்விக்கு உட்​படுத்​து​வது தனிப்​பட்ட தாக்​குதல் மட்​டுமல்ல, அது நாடாளு​மன்​றத்​தின் அதி​காரம் மற்​றும் நாட்டு மக்​களின் ஜனநாயக உரிமை​கள் மீதான நேரடி அவம​திப்​பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், எம்பிக்​கள் மீது அவதூறு சுமத்​தி​யதற்​காக, பிரதமர் மோடி மீது மக்​களவை உரிமை மீறல் நோட்​டீஸ் வழங்​கு​வதாகத் தெரிவித்துள்ளார்.

“நாடாளு​மன்​றத்​தின் புனிதத்தையும் அதன் உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அரசி​யலமைப்புப் பாது​காப்​பையும் நிலைநிறுத்த, சபா​நாயகர் இவ்விவ​காரத்​தில் உடனடி, தீர்க்​க​மான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என வேணுகோபால் வலியுறுத்தி உள்ளார்.

“பதவி​யில் இருக்​கும் பிரதமரின் நாட்டு மக்​களுக்​கான உரை என்பது இதுநாள்வரை எப்​போதும் தேசிய ஒற்​றுமை மற்​றும் நம்​பிக்​கையை வளர்ப்​ப​தற்​கான ஒரு மேடை​யாகவே இருந்து வந்​துள்​ளதாக காங்​கிரஸ் மூத்த தலைவரான ஜெய்​ராம் ரமேஷ் எக்ஸ் தளத்​தில் பதிவிட்டுள்ளார்.

“ஆனால், பிரதமரின் அண்மைய உரை​யின்​போது அவரது வெட்​கமற்ற கட்சி சார்பு பேச்சு, காங்​கிரஸ் கட்​சி​யின் மீது 59 முறை நடத்​தப்​பட்ட தாக்​குதல்​கள், பிரதம​ராக அவரது வரலாற்​றில் மற்​றொரு நிரந்​தரக் கறை​யாக இருக்​கும்​,” என்​று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்