ராஞ்சி: இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) பிணை வழங்கியது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜார்க்கண்டின் சாய்பாசா நகரில் நடந்த பேரணியின்போது அமித்ஷா குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் அவதூறாகப் பேசினார் எனக் கூறி, பிரதாப் குமார் என்பவர் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ராம்கர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு ராகுல் செவ்வாய்க்கிழமை சென்றார்.
அந்நிகழ்வில் பங்கேற்றபின் ராஞ்சி சென்ற ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சாய்பாசாவிற்குச் சென்றார். காலை 10.55 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
முன்னதாக, ஜூலை 26ஆம் தேதியன்று ராகுல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அந்நாளில் அவரால் முன்னிலையாக முடியாது என்றும் அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 6ஆம் தேதி முன்னிலையாக அனுமதிக்க வேண்டும் என்றும் ராகுலின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
அதனை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், சொன்னபடி சாய்பாசா நகர நீதிமன்றத்தில் ராகுல் முன்னிலையானார்.