ரூ.79,000 கோடி ராணுவத் தளவாடங்கள் வாங்க தற்காப்பு அமைச்சு ஒப்புதல்

2 mins read
52bffa2f-37ff-4dd0-8d45-94d1dd0ecbdb
நாட்டின் தற்காப்பு ஆயத்தநிலையை வலுப்படுத்துவதில் தமது அமைச்சு அயராது பாடுபட்டு வருவதாக தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: இந்தியத் தற்காப்பு அமைச்சு தனது ஆயுதப் படையின் போர்த்திறனை வலுப்படுத்த 79,000 கோடி ரூபாய் மதிப்பு ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள், உந்துகணைகள், கண்காணிப்புச் சாதனங்கள், வானூர்திகள் மற்றும் இவை அத்தனைக்குமான ஆதரவுத் தளங்களுக்கான ஒப்புதல் அது.

தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான தற்காப்பு ஆயுதத் தருவிப்பு மன்றம் திங்கட்கிழமை (டிசம்பர் 29) அந்த ஒப்புதலை வழங்கியது.

மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஒப்புதல் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்காப்பு அமைச்சின்கீழ் செயல்படும் ராணுவம், கடற்படை மற்றும் ஆகாயப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் அவை.

ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுக்கு வெடிமருந்துகளை இயக்கும் கட்டமைப்பு, இலகுரக கண்காணிப்புக் கருவிகள், பினாகா உந்துகணை அமைப்பிற்குத் தேவைப்படும் வெடிமருந்துகள் மற்றும் ராணுவத்திற்காக ஒருங்கிணைந்த வானூர்தி கண்டறிதல் அமைப்பு போன்றவற்றைக் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கடற்படைக்கு ‘பொல்லார்ட் புல் டக்’ படகுகள் வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, இந்திய ஆகாயப் படைக்கு, வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை, தேஜாஸ் போர் விமானத்துக்குத் தேவையான உபகரணங்கள் ஆகிய தளவாடங்களும் வாங்கப்பட உள்ளன.

இந்த ஒப்பந்தம் தற்காப்பு அமைச்சின்மீது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதை உணர்த்துவதாக, கூட்டத்திற்குப் பின்னர் தமது எக்ஸ் தளப் பதிவில் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

“நமது முப்படைகளின் பல்வேறு யோசனைகளைப் பரிசீலித்து, ரூ.79,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசியத் தேவைக்கான ஒப்புதலை மன்றம் வழங்கி உள்ளது.

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் இயங்கி வரும் தற்காப்பு அமைச்சு, நாட்டின் தற்காப்பு ஆயத்தநிலையை வலுப்படுத்துவதில் அயராது பாடுபட்டு வருகிறது. இன்று வழங்கப்பட்டுள்ள ஒப்புதல் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை அதிகரிக்க உதவும்,” என்று திரு சிங் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்