புதுடெல்லி: காற்று மாசு காரணமாகப் போராடி வரும் டெல்லி மக்களுக்கு, அங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அவலநிலை குறித்து, ‘லோக்கல் சர்கிள்ஸ்’ என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
இதில் டெல்லி, அதன் சுற்றுவட்டார நகரங்களான குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத், காஸியாபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,000 பேர் பங்கேற்றனர்.
அப்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபரில், டெல்லியின் காற்றுத்தரக் குறியீடு 400-500 என்ற மிக மோசமான நிலையிலேயே இருந்தது.
தீபாவளிப் பட்டாசுப் புகை, விவசாயக் கழிவுகள் எரிப்பு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணம். இதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள காற்றுத்தர வரம்பு பத்து மடங்கு மோசமாக இருந்தது.
இதனால் டெல்லியில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல், இருமல், தொண்டை வலி, கண் எரிச்சல், தலைவலி என ஏதேனும் ஒரு வகையில் உடல்நலப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அங்குள்ள 75% குடும்பங்களில் யாரேனும் ஒருவருக்கு சுவாச நோய் இருக்கிறது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் ஏறக்குறைய 17% பேர் தங்கள் வீட்டில் நான்கு பேருக்கு சுவாச நோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 25% வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்டோர் நோயுற்று இருப்பதாகவும் 33% பேர் வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2023ஆம் ஆண்டு, வேறொரு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் காற்று மாசு காரணமாக டெல்லியில் 17,188 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது டெல்லியில் பதிவாகும் மொத்த மரணச்சம்பவங்களில் 15% ஆகும்.
காற்று மாசுக்கு அடுத்தபடியாக, உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக 12.5% பேர் இறந்துள்ளனர்.

