புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியைப் பெரிய அளவில் பாதித்துவரும் காற்று மாசுபாட்டைத் தணிப்பதற்காக, அங்குச் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அம்முயற்சி பலனளிக்கவில்லை. எதிர்பார்த்தபடி மழை பொழியவில்லை என்று பல இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதனால், டெல்லியில் காற்றுத்தரம் மேம்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக அந்தந்தக் காலகட்டங்களில் ஆட்சியில் இருந்த மாநில அரசாங்கங்கள் செயற்கை முறையில் மழை பெய்ய வைக்க முயற்சி மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வந்தன. குறிப்பாக குளிர்காலத்துக்கு இது பொருந்தும்.
செயற்கையாக உருவாக்கப்படும் மழை, தற்காலிகமாக காற்றில் இருக்கும் தூசு துகள்களை அகற்ற உதவும்.
ஆண்டுதோறும் குளிர்காலத்தில் டெல்லி காற்றுத்தூய்மைக்கேட்டால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் அப்பகுதி ‘நச்சுக்காற்றுக் கூடம்’ (gas chamber) என்றழைக்கப்படுவது உண்டு.
எனினும், பாதகமாக இருக்கும் வானிலை நிலவரம், அனுமதி பெற இடையூறாக இருக்கும் சட்டபூர்வ விதிமுறைகள் நடப்பில் இருப்பது போன்ற காரணங்களால் செயற்கையாக மழையை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
2009ஆம் ஆண்டில் மும்பை நகரம் இந்நடவடிக்கையை எடுத்தது. ஆனால், அதுவும் பலனளிக்காமல் போனது. பிறகு 2023ஆம் ஆண்டில் இந்த ஆலோசனை தலைதூக்கியது. அதுவும் செயல்படுத்தப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான புதிய டெல்லி அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்தது. முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசாங்கம், ஐஐடி கான்பூருடன் சேர்ந்து செயற்கையாக மழை பெய்ய வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
உண்மையில் இந்த முயற்சி பலனளிக்காமல் போவதற்கு அதிக வாய்ப்பிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம், அந்த வேளையில் மழை நீரைத் தாங்கியுள்ள மேகங்கள் இருப்பது உள்ளிட்ட அம்சங்களைப் பொறுத்தே செயற்கை மழை முயற்சி பலனளிக்கும் என்று இந்தியா டுடே ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சூழ்ந்துள்ள காற்றில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் இந்நடவடிக்கை பலனளிக்கவில்லை என அந்த ஊடகத்திடம் பேசிய வல்லுநர்கள் கூறினர்.

