டெல்லி காற்று மாசுக்கான காரணத்தை வெளிப்படையாக அறிவியுங்கள்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

2 mins read
225d10e7-89d9-4495-b8f0-d0f8e5f97eaf
இந்திய உச்ச நீதிமன்றம். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: டெல்லியில் மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அதற்குரிய காரணங்களை காற்று தர மேலாண்மை ஆணையம் அடையாளம் காணவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இவ்விவகாரத்தில் ஆணையம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

மேலும், காற்று மாசுப்பாட்டுக்கான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தீர்வுகளை வழங்கலாம் என்றும் அந்த ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது.

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர், விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், ‘கனரக வாகனங்கள் மற்றும் முறையற்ற கட்டுமானங்கள்தான் டெல்லியில் அதிக அளவில் காற்று மாசு ஏற்படக் காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற அமர்வு சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இதுவரை டெல்லி காற்று மாசுபாடுக்கு வாகனங்கள்தான் 40 விழுக்காடு பங்களிக்கின்றன என்பது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமர்வு, கடந்த காலங்களில் இதை வெளிப்படையாகச் சொல்லாமல், விவசாயிகள் மீது மொத்த பழியும் போடப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கொவிட்-19 தொற்று காலத்தில்கூட விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரித்ததாகவும் அப்போது டெல்லி மக்கள் நல்ல வெளிச்சத்துடன் கூடிய நீல வானத்தைப் பார்க்க முடிந்தது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

வாகனப் போக்குவரத்தும் கட்டுமானமும்தான் மாசுக் கட்டுப்பாட்டுக்குக் காரணம் எனில், அவற்றை நிறுத்த முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதில் நிபுணர்களின் மதிப்பீடுகள் முக்கியம் என்றனர்.

எனவே, காற்றுத் தர மேலாண்மை ஆணையம், அனைத்து தொடர்புடைய துறை நிபுணர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் சமூக, பொருளியல் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

“இரு வாரங்களுக்குள் நிபுணர்கள் கூட்டம் நடத்தி, டெல்லியின் காற்றின் தரம் மோசமடைவதற்கான காரணம் குறித்து, ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்