புதுடெல்லி: தீபாவளி நெருங்கும் வேளையில் டெல்லியில் திங்கட்கிழமை (அக்டோபர் 28) காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது. இதனால் மக்கள் புகை மண்டலத்தில் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக டெல்லி இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் காற்றின் தரம் திங்கட்கிழமை மோசமடைந்தது.
கடந்த 24 மணி நேர சராசரியின்படி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 264 என்ற அளவில் இருந்தது. இது முந்தைய பதிவுடன் ஒப்பிடுகையில் 90 புள்ளிகள் குறைவுதான். இருந்தாலும் திங்கட்கிழமை காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே இருந்தது.
இதற்கிடையே காற்றின் தரத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கு ஜனவரி 1, 2025 வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு டெல்லிவாழ் மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தீபாவளி வாரத்தில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காற்று மாசு இன்னும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்காக, டெல்லிக்குள் பட்டாசுகளைக் கடத்தி வருவதைத் தடுக்க மாநில எல்லைகளிலேயே கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
காற்று மாசு அதிகரிப்பால் தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் போன்றவற்றின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
காற்றின் தரம் 101 முதல் 200 வரை இருந்தால் காற்று மாசு மிதமானது என்று நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்குச் சென்றால் காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம்.
தீபாவளிக்குப் பிறகு, மாசு அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.