புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் திங்கட்கிழமையன்று (ஜூன் 17) திடீர் மின்தடை ஏற்பட்டது.
இதனால் அங்குச் சற்று நேரத்திற்குச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, குழப்பம் ஏற்பட்டது.
“மின்தடையால் டெல்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம் முழுமையாக முடங்கியது. முகப்புகள், டிஜியாத்ரா என எதுவும் செயல்படவில்லை. இது அதிர்ச்சி அளிக்கிறது,” என்று இணையவாசி ஒருவர் தமது ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மின்தடை நீடித்ததாகவும் அதன்பிறகு மின்விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“அதிகப்படியான ‘ஏசி’ மின்சாரம் பாய்ந்ததால், முழுமையான மின்சார விநியோகத்திற்குச் சில நிமிடங்கள் ஆயின. அதனைத் தொடர்ந்து, டிஜியாத்ரா போன்றவை செயல்படத் தொடங்கின,” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
மின்தடை காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

