புதுடெல்லி: ஆண்டுதோறும் குளிர்காலத்திற்குப் பல மாதங்களுக்கு முன்னதாக, உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறும் இந்தியாவின் டெல்லி மாநில அரசு, குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளின் அரசாங்கத் தரவுகளின்படி, நவம்பர் 1 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை டெல்லியின் காற்றுத் தரம் மோசமடைகிறது. இந்தக் காலகட்டத்தில் சராசரியாகக் காற்றின் தரக் குறியீடு பொதுவாக 312 முதல் 342 வரை இருக்கும். குறியீடு 0-50 வரை எனப் பதிவானால் அது ‘நல்லது’ எனக் கருதப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் காற்றின் தரம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே குறைந்தபோது, அதிகாரிகள் ஒரு தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின்படி மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னதாக விதித்தனர்.
புதன்கிழமை (ஜூலை 1) அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின்படி, காற்றின் தரக் குறியீட்டைப் பொருட்படுத்தாமல், அவை இனி நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அமலில் இருக்கும்.
தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை இரட்டிப்பாக்குதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றி அமைக்கப்பட்ட வேலை நேரங்கள், அத்தியாவசியமான பொது உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தவிர மற்ற அனைத்து வெளிப்புற குடிமைப் பணி, கட்டுமானப் பணிகளுக்கும் தடை ஆகியவை இதில் அடங்கும்.
நவம்பர் 1 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் தங்களது ஊழியர்களில் பாதிப் பேர் நேரடியாகப் பணிபுரியவும், மீதிப் பேர் வீட்டிலிருந்து பணியாற்றவும் கட்டாயப்படுத்தப்படும்.
விதிமீறுபவர்கள்மீது வழக்குத் தொடர்வது உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய கொள்கையின் ஒரு பகுதியாக, தங்களது பழைய வாகனங்களைக் கைவிட்டு மின்சார வாகனங்களை வாங்க விரும்பும் கார் உரிமையாளர்களுக்கு $1,000க்கும் அதிகமான ஊக்கத்தொகையை அரசாங்கம் இந்த வாரம் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

