புதுடெல்லி: இந்தியாவின் டெல்லி சட்டமன்ற நாயகரான ராம் நிவாஸ் கோவெல் தேர்தலை உள்ளடக்கிய அரசியல் சூழலில் இருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமையன்று (டிசம்பர் 5) தெரியப்படுத்தினார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் திரு ராம் நிவாஸ் கோவெல் தமது முடிவைத் தெரியப்படுத்தினார். தமக்கு வயதாகி வருவதால் இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.
76 வயதாகும் திரு ராம் நிவாஸ் கோவெல், தமது பதவி விலகல் கடிதத்தில் கட்சி உறுப்பினர்கள் தமக்குக் காண்பித்த மரியாதைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். முன்னாள் டெல்லி முதலமைச்சரான திரு கெஜ்ரிவால், திரு ராம் நிவாஸ் கோவெல் அரசியலில் இருந்து விலகிக்கொள்வது ஓர் உணர்ச்சிபூர்வமான தருணம் என்று வருத்தம் தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து திரு ராம் நிவாஸ் கோவெல் டெல்லி சட்டமன்ற நாயகராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். அவர், டெல்லியின் ஷாஹ்தாரா (Shahdara) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார்.
திரு ராம் நிவாஸ் கோவெல், 2015ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஜித்தேந்தர் ஷன்டியை 11,731 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திரு ராம் நிவாஸ் கோவெல், முதன்முறையாக 1993ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டியிட்டார்.

