ஸ்ரீநகர்: இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள எட்டு இடங்களில் ஒரே சமயத்தில் அதிரடிச் சோதனை நடத்தியது.
புதுடெல்லியில் பதிவு செய்துள்ள வழக்கின் தொடர்பில் எட்டு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதை என்ஐஏ திங்கட்கிழமை பிற்பகல் உறுதி செய்தது.
தெற்கு காஷ்மீர் முழுவதும் திங்கட்கிழமை காலை அதிகாரிகள் எட்டுப் பகுதிகளில் சோதனைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு காஷ்மீரின் குல்காமில் டாக்டர் அடீல் அகமது ராதரின் வீடு, புல்வாமாவில் கோயில் கிராமத்தில் டாக்டர் முஸாமில் ஷகீல் கானாய், ஷோபியானில் உள்ள முஃப்தி இர்ஃபான் அஹமட் வாகேயின் வீடு, புல்வாமாவில் சம்பூராவில் உள்ள அமிர் ரஷீத் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
கடந்த மாதம் டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர். காரை ஓட்டியவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும் தற்கொலைப் படையாக மாறி, அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை எழுப்பிய இந்தப் பயங்கரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சம்பவத்தில், விசாரணையின் மையப்புள்ளியாக அல் பலாஹ் பல்கலைக்கழகம் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அல் பலாஹ் மருத்துவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

