டெல்லிக் குண்டுவெடிப்பு, பயங்கரவாதத் தாக்குதல்தான்: ரூபியோ

2 mins read
11828669-b34f-4512-a759-6a51fe5ff10b
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கனடாவில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, புதன்கிழமை (நவம்பர் 12) ஜான் சி முன்றோ ஹேமில்டன் அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஒன்ட்டாரியோ: டெல்லிக் குண்டுவெடிப்பு, பயங்கரவாதத் தாக்குதல் என்று தெளிவாய்த் தெரிவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கூறியிருக்கிறார். இந்தியாவின் டெல்லி நகரில் செங்கோட்டைக்கு அருகே திங்கட்கிழமை (நவம்பர் 10) நடந்த கார்க் குண்டுவெடிப்பில், பலர் மாண்டனர். மேலும் பலர் காயமுற்றனர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தின் தொடர்பிலான புலனாய்வை இந்தியா கையாண்ட விதத்தைத் திரு ரூபியோ பாராட்டினார்.

இந்தியா, குண்டுவெடிப்பை, பயங்கரவாதச் சம்பவம் என அறிவித்தது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அவ்வாறு பதிலளித்தார். புலனாய்வை மிகவும் துல்லியமாகவும் கவனத்துடனும் நிபுணத்துவ முறையிலும் இந்தியா கையாள்வதாகத் திரு ரூபியோ குறிப்பிட்டார். காரில் ஏராளமான வெடிபொருள்களை வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் நிறையப் பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியா, புலனாய்வு குறித்த தகவல்கள் கிடைத்த பிறகு அவற்றை வெளியிடும் என்று திரு ரூபியோ நம்பிக்கை தெரிவித்தார். குண்டுவெடிப்புக் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் பேசியதாகவும் அவர் சொன்னார்.

அமெரிக்கா உதவத் தயாராய் இருந்ததாகத் திரு ரூபியோ கூறினார். ஆனால் புலனாய்வை நடத்தும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது என்றும் அதற்கு உதவி தேவைப்படாது என்றும் அவர் சொன்னார்.

புலனாய்வு முடிவுகளுக்காக வா‌ஷிங்டன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கனடாவின் நயாகரா வட்டாரத்தில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது டெல்லிக் குண்டுவெடிப்பில் மாண்டோருக்காகத் திரு. ரூபியோ அனுதாபம் தெரிவித்தார். உலக நடப்புகள் குறித்தும் அவர் திரு ஜெய்சங்கருடன் கலந்துபேசினார்.

டெல்லிக் குண்டுவெடிப்பின் தொடர்பில் மருத்துவர்கள் சிலர் சம்பந்தப்பட்ட கட்டமைப்புக்குத் தொடர்பிருப்பது ஆரம்பக்கட்டப் புலனாய்வில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்‌‌ஷ்-இ-முகம்மது, அன்சார் கஸ்வாட்-உல்-ஹிண்ட் அமைப்புகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பிருப்பதாகவும் புலனாய்வு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்