‘மத்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் டெல்லி சலோ பேரணி நாளை தொடரும்’

1 mins read
93e19985-98cc-4ae8-9132-39cfb4efe62c
பேருந்தில் ஓய்வெடுக்கும் பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் விவசாயிகள் சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) மேற்கொள்வதாக இருந்த தங்களின் ‘டெல்லி சலோ’ பேரணியை நிறுத்தி வைத்தனர்.

‌ஷம்பு எல்லையிலிருந்து தலைநகர் டெல்லிக்குப் பேரணி மேற்கொள்ள முயன்றபோது பெரிய அளவில் தடுப்புகள் போடப்பட்டதாலும் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதாலும் பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டெல்லி வரை பேரணியைத் தொடர முடியாமல் போனது.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டால் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 8) ‘டெல்லி சலோ’ பேரணி மீண்டும் தொடங்கும் என்று விவசாயிகள் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட சில விவசாயிகள் காயமுற்றனர் என்று அவர்களின் தலைவர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்தார். பஞ்சாப்-ஹரியானா எல்லையில் காவல்துறையினர், விவசாயிகளைத் தடுத்தனர்.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு குரல் கொடுக்க விவசாயிகள் டெல்லியை நோக்கிய பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்