புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று அரசு வாகனத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார் அதிஷி. அவர் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக நடத்தை விதிமுறைகளை மீறி முதல்வர் அதிஷி அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீதும் பொதுப் பணித்துறை அதிகாரி மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், தேர்தல் பிரசாரம் தொடர்பான பயணங்களுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், குடிசைப் பகுதி மக்களின் நலனைவிட நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத்தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
தேர்தலுக்குப் பிறகு குடிசைப் பகுதி மக்களை அவர்களது வசிப்பிடத்தில் இருந்து அகற்றுவதற்காகத்தான் பாஜக வாக்கு கேட்பதாக அவர் கூறினார்.
குடிசைப்பகுதி மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள கெஜ்ரிவால், அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு அதே இடத்திலேயே வீடு கட்டித்தரப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“இது தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், அவ்வாறு செய்துவிட்டால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுக்கிறேன்,” என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தன்னைப்பற்றி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கெஜ்ரிவால்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவை தொடர்பாக கெஜ்ரிவால் மௌனம் மட்டுமே காத்து வருவதாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தன்னைப்பற்றி பலமுறை அவதூறாக பேசியுள்ளதாக கெஜ்ரிவால் கூறினார். எனினும் ராகுல் காந்தியின் கருத்துகளுக்குத் தாம் பதில் அளிக்கப் போவதில்லை என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
“நான் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவதற்காகப் போராடுகிறார். நான் நாட்டைக் காப்பாற்ற போராடுகிறேன்,” என்று கெஜ்ரிவால் மேலும் கூறினார்.
முன்னதாக, பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு, ஊழல், பணவீக்கம் ஆகியவை அதிகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஊழலை அகற்றப்போவதாக பிரதமர் மோடியைப் போலவே அரவிந்த் கெஜ்ரிவாலும் பொய்யான வாக்குறுதியை மக்களுக்கு அளித்ததாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.