புதுடெல்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரித்து வழங்கி வந்த டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதியை டெல்லி காவல்துறையின் சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முகம்மது சாகில், 25, அவரது மனைவி சமீரா 21 ஆகிய இருவரும் 2024ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற உளவுக் கட்டமைப்பு செயல்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிறப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் சாகில் கைது செய்யப்பட்டார்.
அவரது கைப்பேசியைத் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது, பாகிஸ்தான் முகவர்களுடன் அவர் பேசிய உரையாடல்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து, நொய்டாவில் உள்ள அழைப்பு மையம் ஒன்றில் பணியாற்றி வந்த சமீராவும் கைது செய்யப்பட்டார்.
2024ஆம் ஆண்டு இன்ஸ்டகிராம் செயலி மூலம் சமீராவுக்கு பாகிஸ்தான் முகவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் சாகிலை மணந்த சமீரா, அவரையும் பாகிஸ்தான் முகவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். பண ஆசை காட்டி தம்பதியை உளவு வேலையில் முகவர் ஈடுபடுத்தியுள்ளார்.
இருவரும் 2024, 2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எட்டு இந்திய சிம் அட்டைகளைப் பெற்று, துபாய் வழியாகப் பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஏறக்குறைய ரூ.30,000 பணம் கிடைத்துள்ளது. இந்திய எண்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்குகளைத் தொடங்கிய பாகிஸ்தான் முகவர்கள், இந்தியாவில் உள்ள முக்கிய வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து ரகசியத் தகவல்களைத் திரட்டியுள்ளனர்.
மேலும், இந்திய ராணுவப் பகுதிகளை நோட்டமிடுவது, வீரர்களின் தகவல்களைச் சேகரிப்பது போன்ற பணிகளிலும் சாகில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்களிடமிருந்து இரு அறிவார்ந்த கைப்பேசிகளைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், உளவு கட்டமைப்பின் பின்னணி குறித்தும், உள்ளூர் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


