தடைக்கு எதிரான டெலிகிராம் மேல்முறையீட்டை ரத்து செய்தது டெல்லி நீதிமன்றம்

தடைக்கு எதிரான டெலிகிராம் மேல்முறையீட்டை ரத்து செய்தது டெல்லி நீதிமன்றம்

2 mins read
f193e848-51cb-4c02-8216-c4a1ef17a164
நீட் மறுதேர்வை முன்னிட்டு ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: இந்திய அரசாங்கம் விதித்துள்ள தற்காலிகத் தடையை எதிர்த்து டெலிகிராம் சமூக ஊடக நிறுவனம் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

நீட் மறுதேர்வை முறையாக நடத்தும் நோக்கில் டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சிடம் ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) அந்தத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மறுநாள் திங்கட்கிழமை (ஜூன் 22) வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை தடை விதித்தது.

ஆனால், அந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் சமூக ஊடக நிறுவனத்தின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் அந்த மனு மீது விசாரணை நடத்தி வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை (ஜூன் 18) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சம் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளால் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய முடிவதில்லை. அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடையால் இந்தியா முழுவதும் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்படுவர் என்று டெலிகிராம் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தேஜாஸ் கரியா, வெள்ளிக்கிழமை (ஜூன் 19) டெலிகிராமின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அரசாங்கம் விதித்துள்ள தடை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்