பள்ளிவாசலை இடிப்பதாகக் கலகக்குரல்; தீவிரக் கண்காணிப்பில் மத்திய டெல்லி

2 mins read
25868787-14cd-4eb5-90be-a8d0db4eb759
புதுடெல்லியில் உள்ள துர்க்​மேன் நுழைவாயில் வட்டாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் பதற்றம் நிலவுவதால் அங்குக் காவல்துறை தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. - படம்: தி இந்து

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள துர்க்​மேன் நுழைவாயில் வட்டாரத்தில் முறையான அனுமதியின்றி இயங்கிவந்த கடைகள், அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்​டடங்​கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி  டெல்லி உயர்​ நீதிமன்​றம் உத்​தர​விட்​டது.

அந்த ஆணைக்கிணங்க டெல்லி மாநக​ராட்சி ஊழியர்​கள் மத்திய டெல்லி பகுதியில் உள்ள அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, எதிர்பாராதவிதமாக அங்குக் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் மூண்டது.

மோதல் முடிவுக்கு வந்தாலும் அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அப்பகுதி முழுமையும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரங்களும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தலைநகரிலிருந்து வியாழக்கிழமை (ஜனவரி 8) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தெரிவித்தன. 

மத்திய டெல்லியில் ஃபைஸ்​-இ-இலாகி பள்ளிவாசல், அதன் அரு​கில் மயானத்தை ஒட்​டி​உள்ள இடத்​தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிலர் அங்கிருந்த பள்ளிவாசலை இடிப்பதாகக் கலகக்குரல் எழுப்பியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களில் திரளானோர் அங்குப் பாதுகாப்புப் பணி மேற்கொண்டிருந்த காவல்துறையினரை நோக்கிக் கல்வீச்சு உள்பட வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் அங்கு நிலைமை அத்துமீறிச் செல்வதை தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்​ணீர்ப்புகைக் குண்​டு​களை வீசி​யும் அவர்​களை விரட்​டியடித்​தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படும் சிறார் ஒருவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

மேலும், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, அருகில் உள்ள அடுக்கு​மாடி கட்​டடங்​களில் குடி​யிருந்​தவர்​கள், தங்கள் இல்ல மாடத்தில் நின்​றபடி அரசுக்கும் காவல்துறைக்கும் எதி​ராக முழக்கங்கள் எழுப்​பினர். இதனால் அப்​பகு​தி​யில் பதற்​றம் நில​வியது. 

மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் தடுப்​பு​கள் அமைக்கப்பட்டிருந்தன. பொது​மக்​கள் அவ்விடத்திற்குள் நுழையவும் அனு​ம​திக்​கப் ​பட​வில்​லை.

குறிப்பாக, அப்​பகு​தி​யில் உள்ள கடைகள் அனைத்​தும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மூடப்​பட்​டிருந்​தன.  வன்​முறை​யில் ஈடுபட்டவர்கள்மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.

குறிப்புச் சொற்கள்