புதுடெல்லி: மோசமான பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அங்கு கடந்த சில நாள்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், செவ்வாய்க்கிழமையன்று அடர்பனி மூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஏற்கெனவே மோசமான காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு அவதிகளை எதிர்கொண்டு வரும் டெல்லி மக்கள், தற்போது பனிமூட்டம் காரணமாகத் திண்டாடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் 60 விமானங்களின் புறப்பாடும் 50 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது. மோசமான வானிலை காரணமாக மேலும் 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
இதனிடையே ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில், விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

