பணம், இலவசப் பயணம்: டெல்லியில் பெண்களைக் கவர கட்சிகளிடையே போட்டி

2 mins read
ca252fd9-29da-44b6-8bda-73c4fd118444
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புப் பொருள்களும் ரூ.21,000 ரொக்கமும் வழங்கப்படும் என பாஜக அறிவித்து உள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முன்னணிக் கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்றவை வாக்காளர்களைத் தங்கள்வசம் இழுக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக, பெண் வாக்காளர்களுக்கு அவை போட்டி போட்டிக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. சட்டமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடியவர்களாக உள்ளதாக அந்தக் கட்சிகள் கருதுவதே சலுகை அறிவிப்புகளுக்குக் காரணம்.

டெல்லியில் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளோரில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 71 லட்சம். மொத்த வாக்காளர்களில் அது 46 விழுக்காடு.

அதனால், ஒவ்வொரு பெரிய கட்சியும் வெவ்வேறு சலுகைகளைப் பெண்களுக்கு அறிவித்து வருகின்றன.

பெண்களுக்கு மாதாமாதம் ரூ.2,100 தரப்படும் என்று ஆம் ஆத்மி முதன்முதலில் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பாஜகவும் காங்கிரசும் அந்தத் தொகையை அதிகரித்து ரூ.2,500 தரப்போவதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டன.

ரொக்கப் பணம் தவிர, கர்ப்பிணிப் பெண்களுக்குப் பண உதவி, மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற அறிவிப்புகளையும் அந்தக் கட்சிகள் வெளியிட்டு உள்ளன.

குறிப்பாக, வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மற்ற இரு கட்சிகளின் சலுகைகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் பெண்களுக்கு ஏராளமான உதவிகளை அந்தக் கட்சி அள்ளி வழங்கப் போவதாகத் தெரிவித்து உள்ளது.

“மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அதன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.

“வலுப்படுத்தப்பட்ட மகப்பேறு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கா்ப்பிணிகளுக்கு ஆறு ஊட்டச்சத்து தொகுப்புப் பொருள்களும் ரூ.21,000 ரொக்கமும் வழங்கப்படும். கணவரை இழந்தவா்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயா்த்தப்படும்.

“நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவுவதற்காக, சமையல் எரிவாயு உருளைகளுக்கு தலா ரூ.500 மானியம் வழங்கப்படும்,” என்று பாஜக தேர்தல் அறிக்கையில் சலுகைகள் வாரி வழங்கப்பட்டு உள்ளன.

குறிப்புச் சொற்கள்