புதுடெல்லி: இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்ய இனத்தவர் உள்ளிட்டோர் விவகாரம் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில் தலைதூக்கி உள்ளது.
2025 பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகதிகளால் தேர்தலில் இடையூறு நிகழக்கூடும் என்று அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
இந்திய அரசாங்கத் தரவுகளின்படி, தற்போது இந்தியாவில் ஏறத்தாழ 40,000 ரோஹிங்ய அகதிகள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 22,500 பேர் ஐநா அகதிகள் அமைப்பில் (UNHCR) பதிவு செய்துள்ளனர். ஆயினும், அந்தப் பதிவை இந்திய அரசாங்கம் இதுவரை ஏற்கவில்லை.
மாறாக, அவர்களின் சொந்த நாட்டில் எழுந்துள்ள வன்முறைக்கு அஞ்சி இந்தியாவுக்குள் அனுமதி இன்றி சட்டவிரோதக் குடியேறிகளாக புகுந்து இருப்பதாக இந்தியா கூறுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் குறைந்தபட்சம் 16 ரோஹிங்ய அகதிகளை இந்திய அரசாங்கம் அவர்களின் சொந்த நாடான மியன்மாருக்கு திருப்பி அனுப்பி உள்ளது. வன்முறை நிகழும் இடத்துக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் கொள்கையை மீறி அவ்வாறு செய்யப்பட்டது.
டெல்லி தேர்தல் நெருங்குவதால், அண்மைய வாரங்களாக ரோஹிங்ய அகதிகள் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
டெல்லியில் மட்டும் 4,000 அகதிகள் உள்ளனர் என்றும் அவர்கள் ரோஹிங்ய மக்கள் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது. அவர்களால் தேர்தலில் சட்டவிரோதச் செயல்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்ஸேனா, சட்டவிரோதக் குடியேறிகளைத் துடைத்தொழிக்க கடந்த நவம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
டெல்லியில் வாக்காளர்களாகப் பதிவு செய்யத் திட்டமிட்டு இந்திய அடையாளப் பத்திரங்களைப் பெற சட்டவிரோதக் குடியேறிகள் முயல்வதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அவர் அந்த உத்தரவை வெளியிட்டார்.
மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் நிகழும் வன்முறை காரணமாக உயிருக்குப் பயந்து பங்ளாதேஷ் ஓடிய அகதிகள் அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைகின்றனர்.
அவ்வாறு 2013ஆம் ஆண்டு நுழைந்த 21 வயதுப் பெண்ணான ருக்சானா (உண்மைப் பெயரல்ல) மியன்மாரில் இருந்து பங்ளாதேஷ் ஓடிச் சென்று, அங்கிருந்து மேற்கு வங்காளம் சென்று பின்னர் இறுதியில் டெல்லியில் அடைக்கலம் புகுந்ததாக ஊடகங்களிடம் கூறினார்.
“பங்ளாதேஷோ இந்தியாவோ எங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓர் இடம் தேவை. அதனால், எல்லாரும் எந்தப் பக்கம் ஓடினார்களோ, அதே திசையில் நானும் ஓடினேன்,” என்றார் அவர்.