காதலியை கொன்ற அதே நாளில் வேறொரு பெண்ணை மணந்த சம்பவம்: மேலும் ஐவர் கைது

காதலியை கொன்ற அதே நாளில் வேறொரு பெண்ணை மணந்த சம்பவம்: மேலும் ஐவர் கைது

18 Feb 2023 - 4:20 pm

2 mins read

புதுடில்லியில் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்துவந்த தனது காதலியை கழுத்தை நெரித்து கொன்று சடலத்தை குளிர்ப்பதனப் பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு அதே நாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 வயதான தனது காதலியை கொன்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது சாஹில் முன்னதாக கைது செய்யப்பட்டார். இப்போது சாஹிலின் தந்தை, உறவினர் இருவர், நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நிக்கியும் சாஹிலும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்ததாகக் கூறப்பட்டது. அவர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணமாகிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாஹிலுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்ட தகவலை அறிந்த நிக்கி திருமணத்தை தடுக்க முயன்றுள்ளார். தம்பதிக்கு இடையே வாக்குவாதம் மூண்டதைத் தொடர்ந்து நிக்கியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் சாஹில். சடலத்தை தனது வாகனத்தில் ஏற்றி அதை தனக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்ப்பதன பெட்டியில் வைத்துள்ளார் சாஹில். அடுத்த நாள் தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடந்தது அனைத்தையும் தமது தந்தையிடம் சாஹில் கூறியுள்ளார். மகனின் குற்றத்தை அறிந்தும், சாஹிலின் தந்தை திருமணத்தை நிறுத்தவில்லை. நிக்கியின் சடலத்தை மறைத்துவைக்க சாஹிலின் உறவினர்களும் நண்பர்களும் உதவியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாஹிலுக்கும் நிக்கிக்கும் இடையே உள்ள உறவை சாஹிலின் குடும்பத்தார் அறிந்திருந்தபோதும், சாஹிலுக்கு திருமணம் செய்ய அவர்கள் ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது.

இந்த விவரங்கள் அனைத்தும் சாஹிலின் இரண்டாவது மனைவிக்குத் தெரியாது என்று காவல்துறையினர் கூறினர்.