டெல்லி ஹோட்டல் தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

1 mins read
தலைமறைவாக இருந்த ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் கைது; 45 பேரை மீட்ட உள்ளூர் மக்கள்
3822d798-5613-4a8d-a254-5e7cdf7de697
கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: டெல்லி மாளவியா நகரில் உள்ள இரு ஹோட்டல்களில் மூண்ட கொடூரத் தீ விபத்தில், 12 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சமும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலா ரூ. 10 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளனர்.

மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ.5 லட்சமும் மத்திய அரசு சார்பில் 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்து நடந்தவுடன் தலைமறைவான ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜை காவலர்கள் கைது செய்து, 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடாக உரிமம் வழங்கிய அதிகாரிகளும் விசாரிக்கப்படுகின்றனர்.

தீ விபத்தின்போது 5 மாடிக் கட்டடத்தில் சிக்கியவர்கள் சன்னல் வழியாகக் கூச்சலிட்டனர். உடனே துரிதமாகச் செயல்பட்ட உள்ளூர் மக்கள், போர்வைகள், தரைவிரிப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதில் குதித்த 45க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட முகமது அப்சல், அர்மான் கான், ரியாசுதீன் மன்சூரி உள்ளிட்ட உள்ளூர் இளைஞர்களையும் முதலுதவி அளித்த மருத்துவமனை ஊழியர் வாசீம் ராஜாவையும் டெல்லி காவலர்கள் நேரில் பாராட்டி கௌரவித்தனர்.

குறிப்புச் சொற்கள்