டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு

2 mins read
0f85f1e5-c6b5-4147-8e06-6a42fa501f9a
தம் பெற்றோர், குடும்பத்தாருடன் வாக்களிக்க வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத்திற்குப் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், முற்பகலில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி 57.70 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

மொத்தம் 15,614,000 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 239,905 பேர் முதன்முறை வாக்காளர்கள்.

இந்நிலையில், புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலிருந்தே வாக்குப்பதிவு மந்தகதியில் இருந்தது. முற்பகல் 11 மணிவரை 19.95% வாக்குகளும் பிற்பகல் 1 மணிவரை 33.31% வாக்குகளும் பதிவாகி இருந்தன.

மொத்தம் 97,955 ஊழியர்களும் 8,715 தொண்டூழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அமைதியாக நடக்க 35,626 டெல்லி காவல்துறையினரும் மத்திய ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த 220 கம்பெனி படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மொத்தம் 13,766 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இடம்பெற்ற நிலையில், 70 வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களும் 70 வாக்குச்சாவடிகளில் உடற்குறையுள்ள ஊழியர்களும் தேர்தல் அலுவலர்களாகப் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி சனிக்கிழமை எண்ணப்படவுள்ளன.

கள்ள வாக்கு சர்ச்சை

இதனிடையே, சீலம்பூர் பகுதியிலுள்ள ஆர்யன் பொதுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் கள்ள வாக்கு செலுத்துவதாக பாஜகவினர் குற்றம் சுமத்தினர்.

தலையங்கி அணிந்துவந்த சில பெண்கள் கள்ள வாக்கு செலுத்தினர் என்பதும் அதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் வெளியிலிருந்து ஆண்களையும் பெண்களையும் அழைத்து வந்தனர் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு.

ஆனால், தங்களின் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டனர் என்று பெண் வாக்காளர்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து, அங்கு ஆம் ஆத்மி, பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால், அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்