புதுடெல்லி: டெல்லி புதிய சட்டமன்ற சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கிய டெல்லி சட்டமன்றத்தின் முதல் அமர்வில் இடைக்கால சபாநாயகராக அரவிந்தர் சிங் லவ்லி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தலைமையில் நடந்த மன்ற நடவடிக்கைகளில் புதிய சபாநாயகர் குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, ஆம் ஆத்மியின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடையூறு விளைவித்ததால் மன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
விஜேந்தர் குப்தா தனது தொடக்க உரையில், அனுமதியின்றி பிரச்சினையை எழுப்பி மன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிஷிக்கு கண்டனம் தெரிவித்தார்.
முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர்கள் உருது, பஞ்சாபி, சமஸ்கிருதம், மைதிலி, ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் பதவியேற்றனர்.
கல்காஜி தொகுதியின் எதிர்க்கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான அதிஷியும் பதவியேற்றார். ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முன்னாள் டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தாவும் ஆறு அமைச்சர்களும் கடந்த வாரம் பதவியேற்றனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 70 இடங்களில் 48 இடங்களை வென்று, 22 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சியின் பத்தாண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.