புதுடெல்லி: கைக்குழந்தையைக் கடத்திய சந்தேகதத்தின்பேரில் 39 வயது ஆடவர் ஒருவரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
அந்த 11 மாதக் குழந்தையை அந்த ஆடவரின் மனைவியே காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, அந்த ஆடவரைக் காவல்துறை வியாழக்கிழமை (ஜனவரி 18) கைதுசெய்தது.
நவீன் மிஸ்ரா என்ற அந்த ஆடவருக்கும் அவருடைய மனைவிக்கும் குழந்தை இல்லை எனக் காவல்துறை கூறியது.
“தன்னுடைய 11 மாத ஆண் குழந்தையைக் காணவில்லை என புதன்கிழமை பெண் ஒருவர் தொலைபேசி புகார் கொடுத்தார். அழகு நிலையம் நடத்திவரும் அவருக்கு இரண்டு குழந்தைகள். இரவு எட்டு மணியளவில் ஆண் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் அவனை வெளியே தூக்கிச் செல்லும்படி தன் எட்டு வயது மகளிடம் அப்பெண் கூறினார்.
“சிறிது நேரம் கழித்து, அச்சிறுமி தன் தாயிடம் ஓடிவந்து, யாரோ ஓர் ஆடவர் மோட்டார்சைக்கிளில் தம்பியைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறினாள்,” என்று காவல்துறை தெரிவித்தது.
கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் துணையுடன் அந்த மோட்டார்சைக்கிளின் பதிவெண்ணைக் காவல்துறை கண்டுபிடித்தது. பின் அவ்வாகனம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவுசெய்யப்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது.
சந்தேகப் பேர்வழியைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டிருந்தபோது, இரவு 10.40 மணியளவில் மிஸ்ராவின் மனைவி காவல் நிலையத்திற்கே நேரில் வந்து குழந்தையை ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து மிஸ்ராவைக் கைதுசெய்து விசாரித்தபோது, தங்களுக்குக் குழந்தை இல்லாததால் குழந்தையைக் கடத்தியதாக அவர் தெரிவித்தார்.