தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே ஆண்டில் 200 முறை விமானத்தில் சென்று பயணிகளிடம் திருடியவர் கைது

2 mins read
a60ca910-4808-4a43-9208-dfcbda63a993
கைதுசெய்யப்பட்ட ராஜேஷ் கபூர், பெண்களையும் முதியவர்களையும் குறிவைத்து தனது கைவரிசையைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: சென்ற 2023ஆம் ஆண்டில் மட்டும் 200 முறை விமானத்தில் பயணம் செய்து, விமான நிலையங்களிலும் விமானங்களிலும் பல பயணிகளின் உடைமைகளைக் களவாடிச் சென்ற ஆடவரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போயின. அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், அமிர்தசரசிலிருந்து விமானம் மூலமாக டெல்லி சென்றபோது, தனது பையிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்களைக் காணவில்லை எனக் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையக் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளைப் பல மணி நேரம் ஆராய்ந்த காவல்துறை, முடிவில் ராஜேஷ் கபூர் என்ற ஆடவரைக் கைதுசெய்தது.

குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து, இணைப்பு விமானத்தில் செல்லும் பயணிகளையே ராஜேஷ் குறிவைத்ததாக டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் உஷா ரங்ராணி தெரிவித்தார்.

மேலும், முதிய பயணிகளையும் பெண்களையும் குறிவைக்கும் ராஜேஷ், விமான நிலையத்தில் அவர்களின் நடவடிக்கைகளை நோட்டம் விடுவார்.

விமானத்திற்குள் சென்றதும் விமானப் பணியாளர்களிடம் கேட்டு, தாம் குறிவைத்த பயணிக்கு அருகிலுள்ள இருக்கையில் சென்று அவர் அமர்ந்துகொள்வார்.

பின்னர் அவர், விமானத்தின் மேற்பகுதியில் பைகள் வைக்கும் பகுதியைத் திறந்து, தனது பையில் எதையோ எடுப்பதுபோல் நடித்து, மற்றப் பயணிகளின் நகைகளை அல்லது விலையுயர்ந்த பொருள்களைத் திருடி, தனது பைக்குள் போட்டுவிடுவார்.

டெல்லி பாகர்கஞ்சில், புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு அருகே, ராஜேஷுக்குச் சொந்தமான விருந்தினர் இல்லம் ஒன்று இருக்கிறது. அதன் மூன்றாவது தளத்தில் அவர் வசித்து வந்தார். மற்றத் தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தன.

அத்துடன், நாணய மாற்றுத் தொழிலிலும் கைப்பேசி பழுதுநீக்கும் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறை கூறியது.

டெல்லி பாகர்கஞ்சிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஏராளமான தங்க, வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன், பலமுறை தான் திருடிய நகைகளை டெல்லி கரோல்பாக் பகுதியிலுள்ள சரத் ஜெயின் எனும் நகைக்கடைக்காரரிடம் விற்றதாகவும் ராஜேஷ் கூறினார்.

முன்னதாக, ரயில்களில் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ராஜேஷ், காவல்துறையிடம் பிடிபட்டார். சிறிதுகாலம் அமைதியாக இருந்த அவர், பின்னர் விமான நிலையங்களில் தனது கைவரிசையைக் காட்ட முடிவுசெய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்