புதுடெல்லி: மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை போன்ற அரசு அமைப்புகள் வரிசையில் இப்போது தேர்தல் ஆணையத்தையும் பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்தி வருகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி மார்லேனா தெரிவித்துள்ளார்.
பாஜக என்ன சொல்கிறதோ, அதன்படி நடந்துகொள்வதாகத் தேர்தல் ஆணையத்தையும் அவர் சாடினார்.
பாஜகவில் இணையாவிடில் அமலாக்கத் துறை நடவடிக்கை பாயும் என்று தான் மிரட்டப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, அதற்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அதிஷிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், “வெறும் சந்தேகத்தின்கீழ் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை அமலாக்கத் துறை கைதுசெய்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை இதுவரையிலும் உறுதிப்படுத்த முடியவில்லை,” என்று சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிஷி கூறினார்.
பாஜக தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டெல்லி கலால் மோசடியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரிடமிருந்து தேர்தல் பத்திரங்களாக பாஜக பல கோடி ரூபாய் பெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி, பாஜகவிற்கு எதிராகக் கடந்த மாதம் அமலாக்கத் துறையிடம் புகார் அளித்திருந்தது.
மத்திய அரசு அமைப்புகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு செயல்படுவதை விட்டுவிட்டு, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்துப் போட்டியிடும்படி பாஜகவிடம் தான் சொல்ல விரும்புவதாகவும் அதிஷி கூறியுள்ளார்.

