புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
டெல்லியின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்த சிஏஜி அறிக்கை, கடந்த ஆறு ஆண்டுகளில் முறையற்ற நிதி நிர்வாகம், அலட்சியம், பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.
மொஹல்லா மருத்துவமனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதுதொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
அதன்படி, சட்டமன்றத்தில் டெல்லியின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்த சிஏஜி அறிக்கை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், சுகாதாரத் துறையில் போதிய பணியாளர்கள் இல்லாதது, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, அக்கம்பக்க மருந்தகங்களின் மோசமான உள்கட்டமைப்பு, நிதி மேலாண்மையில் அலட்சியம் ஆகியவை குறித்தும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான நிதி முறைகேடு, அலட்சியம், பொறுப்புணர்வு இல்லாமை ஆகியவற்றை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சிஏஜி வெளியிட்டுள்ள முக்கிய தரவுகள்
[ο] டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் முறையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவது இல்லை. நகரத்தில் மொத்தமுள்ள 27 மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் 16 மருத்துவமனைகளில் ரத்தவங்கிகளும் இல்லை.
[ο] எட்டு மருத்துவமனைகளில் உயிர்வாயு விநியோகமும் 15 மருத்துவமனைகளில் பிணவறைகளும் இல்லை. மேலும், 12 மருத்துவமனைகள் அவசர ஊர்திகள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
[ο] பல அக்கம்பக்க மருத்துவமனைகளில் கழிவறைகள், மின்னாக்கி வசதிகள், பரிசோதனை மேசைகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லை. ஆயுஷ் மருந்தகங்களிலும் இதுபோன்ற குறைபாடுகள் உள்ளன.
[ο] தாதியர்கள் பற்றாக்குறையும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 21% தாதியர் பற்றாக்குறையும், 38% துணை மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையும் சில மருத்துவமனைகளில் 50-98% மருத்துவர், தாதியர் பற்றாக்குறையும் இருக்கிறது.

