புதுடெல்லி: டெல்லியின் நாகலோய் பகுதியில் தனது பைக்கில் காவல் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, டெல்லி காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவரை கவனமாக ஓட்டிச் செல்லும்படி காவலர் சைகை காட்டியதால், ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் காவலர் மீது மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய சந்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்குத் தாய், மனைவி, 5 வயது மகன் ஆகியோர் உள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின்படி, நாகலோய் பகுதியில் சந்தீப் இடதுபுறம் திரும்பி காரை மெதுவாகச் செல்லும்படி சுட்டிக்காட்டுகிறார். அப்போது கார் திடீரென வேகமாகச் சென்று பைக் மீது மோதி சந்தீப்பை பைக்குடன் ஏறக்குறைய 10 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதுவது தெரிகிறது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சந்தீப் மரணம் அடைந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து, கார் ஓட்டுநர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டார். காரை காவலர்கள் மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து காரின் ஓட்டுநர் அங்கிருந்து தலைமறைவானார். காரை காவலர்கள் மீட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இக்குற்றம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், குற்றவாளியைக் கைது செய்ய தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

