புதுடெல்லி: இண்டியா கூட்டணி சார்பில் நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்குமாறு பொதுச் சமூக அமைப்புகளுக்கும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ராம் லீலா திடலில் பேரணி நடத்த எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் விதமாக, மாணவர்களும் சமூக அமைப்புகளும் பேரணியில் இணைய வேண்டும் என இண்டியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை பல அமைப்புகள் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் டெல்லி பேரணியை அரசியல் கட்சிகளின் போராட்டமாகவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அனைத்துப் போராட்டங்களும் ஒன்றே என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்த பிறகு காட்சிகள் மாறின.
இதுகுறித்துத் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் கூறுகையில், “இந்தப் பேரணியில் மாணவர்கள், பொது சமூகப் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்பார்கள். எங்களிடையே எவ்விதப் பிரிவினையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்,” என்றார்.
அண்மையில், டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய உச்ச நீதிமன்றத்தை நோக்கிய பேரணி, அதிபர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மனு அளித்த போராட்டங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் போராட்டத் திட்டங்களை ஒருங்கிணைக்கவும் திட்டமிடவும் 10 முதல் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு விரைவில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) விடுதலைக் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
