புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் அங்கு தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் கட்டுமானத் தளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வீணாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வீட்டுப் பயனீட்டுக்காக வழங்கும் தண்ணீரை வணிக ரீதியாகவோ, கட்டுமானங்களுக்காகவோ, வாகனங்களைச் சுத்தம் செய்வதற்காகவோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தண்ணீரை வீணாக்குவது கண்டறியப்பட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லிக்கு வழங்க வேண்டிய குடிநீரை குறைத்து விட்டதன் காரணமாகவே டெல்லியில் மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது. இப்போது யமுனை ஆற்றில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அதையடுத்து, டெல்லியின் தெற்குப் பகுதியின் பல வட்டாரங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே குடி நீர் வழங்கப்படுகிறது. வழக்கமாக நாள்தோறும் இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்படும். தண்ணீர்த் தட்டுப்பாடு நிலைமை சீரடையும்வரை இந்த நிலைமை தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தண்ணீர் வீணாகச் செலவிடுவதைத் தடுக்கும் வகையில் டெல்லி அரசு, 200 சிறப்புக் குழுக்களை அமைத்து தண்ணீர்ப் பயனீட்டைக் கண்காணிக்க நீர்வாரியத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.
தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்றுஅமைச்சர் அதிஷி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

