புதுடெல்லி: செய்முறைத் தேர்வின்போது தேர்வுக் கண்காணிப்பாளரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நிகழ்ந்தது.
இதனால், ஹரியானா மாநிலம், ரோத்தக் பகுதியைச் சேர்ந்தவர் பூதேவ், 29 என்ற அந்த ஆசிரியர் வயிற்றுப்பகுதியில் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சில நாள்களுக்குமுன் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்த அம்மாணவரை திரு பூதேவ் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மீண்டும் அதே காரணத்திற்காக அம்மாணவரை அவர் கடிந்துகொண்டார்.
இதனையடுத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவரை மாடிப்படிகளில் மூன்று மாணவர்கள் இடைமறித்ததாகவும் அப்போது அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அவரைக் குத்தியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் 18 வயது மாணவர் ஒருவரைக் கைதுசெய்துள்ள காவல்துறை, மேலும் இருவரைத் தேடி வருகிறது. திரு பூதேவைக் குத்தப் பயன்படுத்திய கத்தியும் கைப்பற்றப்பட்டது.
தாக்கப்பட்ட திரு பூதேவிற்குக் கர்ப்பிணி மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

