தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரம்பை பலமடங்கு மீறிய டெல்லி பனிப்புகை; பள்ளிகள் மூடல்

1 mins read
084309ba-35e0-40ef-ad4f-3a863380f20a
புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம், உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விடவும் 60 மடங்குக்கும் மேல் மோசமடைந்துள்ளது.

அதன் காரணமாக திங்கட்கிழமையன்று (நவம்பர் 18) அந்நகரில் பள்ளிகள் மூடப்பட்டன.

நிலைமையைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசாங்க நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை ஆண்டுதோறும் பாதிக்கும் பனிப்புகையால் ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடுவதாகவும் நம்பப்படுகிறது.

பனிப்புகை, குறிப்பாக சிறார், முதியோரின் உடல்நலனைப் பாதிப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் நேரடி வகுப்புகளை நடத்தாமல் இருக்குமாறு கடந்த வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) தொடக்கப்பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. டீசலில் ஓடும் லாரிகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் திங்கட்கிழமையன்று (நவம்பர் 18) எடுக்கப்பட்டன.

நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க அந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு, பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது சாலைப் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

“10, 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர எல்லா மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படாது,” என்று டெல்லி முதலமைச்சர் அதி‌ஷி ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 17) அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சிறார், முதியோர், நுரையீரல் மற்றும் இதயப் பிரச்சினைகள் இருப்போரைக் கூடுமானவரை உள்ளரங்குகளில் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்