புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை அடுத்து, (எஸ்ஐஆர்) டெல்லியில் ஏறக்குறைய 47.7 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள மொத்தம் 1.45 கோடி வாக்காளர்களில், ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் நிறைவடைந்த வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் 97.5 லட்சம் வாக்காளர்களின் பெயர் மட்டுமே மின்னிலக்க முறையில் பதிவேற்றப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 67.18 விழுக்காடு மட்டுமே ஆகும்.
முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டைப் பதிவுப் பிரிவுகளின்கீழ் மீதமுள்ள 47.7 லட்சம் பேரின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஓக்லா தொகுதியில் பெறப்பட்ட படிவங்களில் 45.32 விழுக்காடு, திரும்பப் பெற முடியாதவை எனக் குறிக்கப்பட்டுள்ளன. சாந்தனி சௌக், பலிமரான், முஸ்தஃபாபாத் போன்ற சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் படிவங்கள் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்த குடும்பங்களின் விவரங்களை 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதில் சிரமம் ஏற்பட்டதே இதற்கு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.
வரைவுப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30 வரை தங்களது கோரிக்கைகள், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம். இதற்கான சீரமைப்பு, நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கைகள் அக்டோபர் 29ஆம் தேதியுடன் முடிவடையும்.
திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 4ஆம் தேதி முறைப்படி வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


