புதுடெல்லி: கார்களைத் திருடி, இணையவழி விற்ற கும்பலைச் சேர்ந்த 13 பேரை டெல்லி காவல்துறை கைதுசெய்துள்ளது.
‘கார்ஸ்24’, ‘கார்தேக்கோ’ என்ற கார் விற்பனை இணையத்தளங்கள் வழியாக அவர்கள் திருட்டு கார்களை விற்றதாகக் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்டோரில் ‘கார்ஸ்24’ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவரும் ‘கார்தேக்கோ’ முன்னாள் ஊழியர் ஒருவரும் அடங்குவர் எனக் காவல்துறை தெரிவித்தது.
அந்தத் திருட்டுக் கும்பல், கார் இயந்திரம், அடிச்சட்ட (Chassis) எண் போன்றவற்றை மாற்றியபின், அதே வகையைச் சேர்ந்த இன்னொரு காருக்கு உரியது போன்ற ஆவணங்களைத் தயார்செய்து, பின்னர் இணையம் வழியாக அந்தத் திருட்டு காரை விற்பனைக்கு விடும் என்று காவல்துறைக் கூடுதல் ஆணையர் சஞ்சய் பாட்டியா விளக்கினார்.
“கடந்த சில மாதங்களில் கார்ஸ்24, கார்தேக்கோ தளங்கள் வழியாக விற்கப்பட்ட மகிந்திரா தார், டொயோட்டா இன்னோவா, எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட விலையுயர்ந்த 20 கார்களை மீட்டுள்ளோம்,” என்று திரு சஞ்சய் சொன்னார்.
காரின் உண்மையான உரிமையாளரின் பெயரிலேயே அக்கும்பல் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களையும் அவரது பெயரில் வங்கிக் கணக்கையும் தொடங்கும் எனக் கூறப்பட்டது.
கும்பலைச் சேர்ந்த ஒருவர் பின்னர் இணையவழி கார் விற்பனைத் தளங்களை அணுகுவார். போலிப் பதிவுச் சான்றிதழும் உண்மையான சான்றிதழுடன் பொருந்தும் என்பதால், அந்த வாகனம் ‘திருட்டுப் போனதாக’ எந்தப் பதிவும் இராது.
இந்த வகையில், அந்தத் திருட்டுக் கும்பல் இதுவரை 40க்கும் மேற்பட்ட கார்களை விற்றுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
திருட்டு கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பது கடினம் என்பதால், இணையத்தளம் வழியாக அவற்றை விற்பதற்கான வழிகள் அனைத்தும் ஆராய்ந்தோம் என்று கைதானவர்களில் ஒருவன் சொன்னதாகக் காவல்துறை கூறியது.
கைதானவர்கள் 24 முதல் 54 வயதிற்குட்பட்ட ஆடவர்கள் என்றும் அவர்கள் டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

