டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் அக்கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாஜக தொண்டர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி அக்கட்சியின் தலைமை அலுவலகம் சென்றார்.
“இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பாஜக செய்த வளர்ச்சிப் பணிகள் மட்டுமே காரணம், இந்த வெற்றி கட்சி மீதான நம்பிக்கையை குறிக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தொண்டர்களுக்கு மத்தியில் மோடி பேசினார்.
“எங்களின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது. நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சந்திரபாபு நம்பிக்கை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “டெல்லி மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
தங்களின் சரியான ஆலோசனை திறனால் டெல்லி மக்கள் எடுத்துள்ள இந்த முடிவு இந்தியத் தலைநகரின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான கும்பல் உருவானது. இதே நிலைதான் டெல்லியிலும் ஏற்பட்டது. ஆந்திரா மற்றும் டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்களின் வாக்குகளால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து தங்களை காப்பாற்றிக் கொண்டனர். இந்தியா 2047ல் உலகிலேயே ஒரு உன்னதமான நிலைக்கு செல்லும், என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
முதலமைச்சர் யார் ?
இந்நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம், மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முதல்வர் அதிஷி ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் அவர் வழங்கினார்.