புதுடெல்லி: இந்தியாவில் வாக்குத்திருட்டு நடைபெறுவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி டெல்லியில் அதனை வலியுறுத்தி பேரணி நடத்தி உள்ளது.
தேர்தல் நேரங்களில் ஒரு பக்கம் வாக்குகளைத் திருடும் பாஜக, மறுபக்கம் வாக்குக்கு ரூ.10,000 வழங்கி வருகிறது என்றும் பாஜகவினரின் டிஎன்ஏவில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி, அமித் ஷா , ஆர்எஸ்எஸ் கூட்டணி ஆட்சியை அகற்றுவோம் என்று அவர் சபதமிட்டார்.
மக்களவையில் அண்மையில் தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக நடைபெற்ற விவாதத்தின் போது வாக்குத் திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் முறைகேடு குறித்தும் மக்களவை ராகுல் காந்தியும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் விரிவாக எடுத்துரைத்தனர்.
அவர்களின் அந்தக் கூற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராகுல் காந்தி விவாதத்துக்கு அழைத்தார். ஆனால் அமித் ஷா அதற்குத் தயாராக இல்லை.
இந்த நிலையில், வாக்குத் திருட்டு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) பேரணி நடத்தியது.
அந்தப் பேரணிக்கு ‘வாக்குத் திருடர்களே, பதவியைவிட்டு விலகுங்கள்’ என்று பெயரிடப்பட்டு இருந்தது.
பேரணி முடிவில் ராகுல் காந்தியும் மல்லிகாா்ஜுன கார்கேயும் கண்டன உரையாற்றினர். அந்த மேடையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் காணப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ராகுல் காந்தி பேசும்போது, ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, அவர்களுக்காக (தேர்தல் ஆணையம்) ‘கைகள் நடுக்கத்துடன்’ விளக்கம் அளித்ததாகக் குற்றம் சாட்டினார்.
“தேர்தல் ஆணையம், பாஜகவிற்கு ஆதரவாக இணைந்து செயல்படுகிறது. மோடி அரசு அவர்களுக்காக சட்டத்தில் மாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையரை பாதுகாக்கிறது.
“அதனால், தேர்தல் நேரங்களில் ஒரு பக்கம் வாக்குகளைத் திருடும் பாஜக, மறுபக்கம் வாக்குக்கு ரூ.10,000 வழங்கி வருகிறது. வாக்குத் திருட்டு பாஜகவின் மரபணுவில் நிறைந்துள்ளது,” என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதற்கு மேலாகக் கடுமையாகப் பேசிய அவர், “நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையர்கள், மோடியின் தேர்தல் ஆணையர்கள் அல்லர் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் சட்டத்தை மாற்றி உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,” என்று எச்சரித்தார்.

