ஆடவரின் வயிற்றிலிருந்து 39 நாணயங்கள், 37 காந்தங்கள் அகற்றம்

ஆடவரின் வயிற்றிலிருந்து 39 நாணயங்கள், 37 காந்தங்கள் அகற்றம்

கட்டழகனாக விரும்பி, விபரீத முயற்சி!
படம்: இந்திய ஊடகம்

27 Feb 2024 - 5:09 pm

1 mins read

புதுடெல்லி: ஆடவர் ஒருவரின் வயிற்றிலிருந்து 39 நாணயங்களையும் 37 காந்தங்களையும் டெல்லி ஸ்ரீ கங்காராம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.

டெல்லியைச் சேர்ந்த அந்த 26 வயது ஆடவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. உடற்கட்டழகனாக விரும்பிய அவர், நாணயங்களில் இருக்கும் துத்தநாகச் சத்து அதற்கு உதவும் என்ற எண்ணத்தில், அவற்றை விழுங்கியதாகச் சொல்லப்படுகிறது.

குடலுக்குள்ளேயே நாணயம் இருப்பதை காந்தம் உறுதிப்படுத்தும் என்றும் துத்தநாகச் சத்தை உடல் உறிஞ்ச அது உதவும் என்றும் அவர் நம்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 20-22 நாள்களாக அவர் நாணயங்களையும் காந்தங்களையும் விழுங்கியதாக அவர்களின் உறவினர்கள் கூறினர். இதையடுத்து, தீராத வயிற்றுவலியால் அவர் அவதியுற்றார்; திரும்ப திரும்ப வாந்தியும் எடுத்ததால் அவரால் எதையும் உண்ணவும் முடியவில்லை.

அதனையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சென்ற வாரம் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவருக்கான அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.

இப்படி நாணயம், காந்தம் போன்ற பொருள்களை விழுங்குவது உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்