புதுடெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை காலை காற்றுத் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நகரின் காற்றுத் தரக் குறியீடு 270ஆகப் பதிவாகியுள்ளதாக அந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 7.05 மணி நிலவரப்படி, நகர் முழுவதும் நுண்ணிய மாசுத் துகள்களின் தாக்கமே அதிகமாக இருந்தது. பல்வேறு கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300ஐ தாண்டியது. ஆக அதிகபட்சமாக சிரிகோட்டை வட்டாரத்தில் காற்றுத் தரக் குறியீடு 348 ஆகப் பதிவானது.
முன்னதாக, காற்றுத் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியிலும் தேசியத் தலைநகர் வளையத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த படிப்படியான எதிர்வினை செயல் திட்டத்தின் மூன்றாம் கட்டக் கட்டுப்பாடுகளைக் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் நவம்பர் 17ஆம் தேதி திரும்பப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தலைநகரின் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் டெல்லி ஓரளவு நிம்மதி கண்டுள்ளதாகத் தெரிவித்தார் திருவாட்டி குப்தா.
கட்டுமானம், இடிப்புப் பணிகள் நடைபெறும் இடங்களிலும், கட்டுமானத் தளங்களிலும் இருந்து தூசு வெளியில் வராமல் தடுப்பதற்கு மாசுத் தடுப்புகள் பொருத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் திருவாட்டி குப்தா.
