ஹைதராபாத்: முன்னணித் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவிற்குச் சொந்தமான மண்டபம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) இடிக்கப்பட்டது.
ஹைதராபாத் நகரின் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜுனாவிற்குச் சொந்தமான ‘என் கன்வென்ஷன் சென்டர்’ என்ற மண்டபம் இருந்தது. அம்மண்டபம் தும்மிடிகுண்டா ஏரிக்குச் சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், மழைக் காலத்தில் ஹைதராபாத் நகரில் தண்ணீர் செல்ல முடியாமல் ஏரி, குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக, ஐபிஎஸ் அதிகாரி ரங்கநாதன் தலைமையில் ‘ஹைட்ரா’ அமைப்பை உருவாக்க உத்தரவிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதில் அரசியல் தலையீடு இல்லாதவாறும் பார்த்துக்கொண்டார்.
இதனையடுத்து, கடந்த சில வாரங்களாக ‘ஹைட்ரா’ அமைப்பினர் நகரின் பல இடங்களில் நீர் ஆதாரப் பகுதிகளை ஆய்வு செய்து, ஆக்கிரமித்துக் கட்டியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.
கட்டடங்கள் இடிக்கப்படுவதை ஊடகங்கள் படமெடுப்பதைக் காவல்துறையினர் தடுத்தனர்.
இதனிடையே, இடைக்காலத் தடையாணையும் நீதிமன்றத்தில் வழக்குகளும் உள்ளபோது, சட்டவிரோதமான முறையில் மண்டபத்தை இடித்தது வேதனை தருவதாக உள்ளது என்று எக்ஸ் ஊடகம் வழியாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
மண்டபம் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு முறைப்படி பட்டா உள்ளது என்றும் ஓர் அங்குல இடம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பில் உரிய நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என யாராக இருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் எதையும் விட்டுவைக்க மாட்டோம் என்று ‘ஹைட்ரா’ அமைப்பின் ஆணையர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

