புதுடெல்லி: அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் டெங்கி, சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசிகள் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வகை கொசுக்கள் மூலம் டெங்கி, சிக்குன் குனியா காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பலர் இறக்க நேரிடுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 2.34 லட்சம் பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாடு முழுவதும் 297 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
நடப்பாண்டில் இதுவரை 1.92 லட்சம் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ராஜேஷ் சுதிர் கோகலே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெங்கி தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், சிக்குன் குனியா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை நிறைவடைந்து, தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
டெங்கி, சிக்குன்குனியா தடுப்பூசிகள் தொடர்பாக மத்திய அரசு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அவற்றின் சோதனை முழுமையாக நிறைவடையும் என்றும் அதன் பின்னர் அவை உடனடியாக சந்தைப்படுத்தப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.