தமிழ்நாட்டில் வேகமெடுக்கிறது டெங்கிப் பரவல்: ஒரே நாளில் 253 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் வேகமெடுக்கிறது டெங்கிப் பரவல்: ஒரே நாளில் 253 பேர் பாதிப்பு

1 of 2
கோப்புப் படம்: தினத்தந்தி
படம்: சதீஷ் பார்த்திபன்

20 Sep 2026 - 6:59 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கிப் பரவல் வேகமெடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) ஒரே நாளில் 253 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகச் சுகாதாரத் துறை தெரிவித்தது.

கடந்த சில மாதங்களாகவே டெங்கிக் காய்ச்சல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) 133 பேரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) 244 பேரும் டெங்கி பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 1 முதல் 18ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 3,096 பேரிடம் டெங்கி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆகக் கடைசியாக, கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19) வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மாநிலம் முழுவதும் 17,083 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கிக் காய்ச்சல் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை ஒன்பது எனப் பதிவாகி உள்ளது.

ஒவ்வொரு நாளும் டெங்கிக் காய்ச்சலுக்கு மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், டெங்கிப் பரவலை அறிந்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

“காய்ச்சலுக்கான சிகிச்சை முகாம்கள், கொசு ஒழிப்புப் பணிகள் போன்றவை முழுவீச்சில் நடைபெறுகின்றன. அச்சம் தேவையில்லை; ஆனால் அலட்சியமும் கூடாது.

“வீடுகளில் தேங்கும் நீரை அகற்றுங்கள். காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள். இணைந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை பாதுகாப்போம்,” என்று அமைச்சர் அருண்ராஜ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “பருவகால மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் டெங்கிப் பாதிப்பு அதிகமாகத்தான் உள்ளது. தேங்கும் மழைநீரை முறையாக அகற்றாத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்,” என்று எச்சரிக்கை விடுத்தார்.

சென்னையில் டெங்கி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நகரில் டெங்கி ஒழிப்பு பணியில் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பணியாளரும் நாள்தோறும் 80 முதல் 100 வீடுகளைப் பார்வையிடுவதாக அவர் கூறியுள்ளார்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 3 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 161 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்