புதுடெல்லி: கிரிக்கெட் விளையாட்டின் முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பொறுப்புக்குத் தாம் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
டெண்டுல்கர் அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்ற வதந்திகள் பரவின. இதற்கு முன்னர் வாரியத்தின் தலைவராக இருந்த ரோஜர் பின்னி அண்மையில் பதவி விலகினார். பிசிசிஐ விதிமுறைகளின்படி ஒருவர் 70 வயதை எட்டினால் தலைமைப் பொறுப்பில் நீடிக்கமுடியாது.
தற்போது துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தற்காலிகத் தலைவராகச் செயல்படுகிறார். வாரியத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் இம்மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. அதில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் தலைவராகக்கூடும் என்ற வதந்தி குறித்து அவரின் பணிகளைக் கவனித்துக்கொள்ளும் எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் நிர்வாக நிறுவனம் பதில் தந்தது.
“திரு சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐயின் தலைவர் பொறுப்புக்குப் பரிசீலிக்கப்படுவது அல்லது நியமிக்கப்படுவது குறித்த தகவல்களும் வதந்திகளும் பரவிவருவதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அது குறிப்பிட்டது. டெண்டுல்கர் இதுவரை இந்திய கிரிக்கெட் அமைப்புகளில் எந்தவொரு நிர்வாகப் பதவியையும் வகித்ததில்லை.